text
stringlengths 11
513
|
---|
எங்களிடையே தோழமை உருவாக வேண்டும் , அது பலப்பட வேண்டும் என்று எவ்வளவு முயலுகிறான். பொதுவான இழைகளைத் தேடியவாறு இருக்கிறான். தனக்கு சாம்பார் ரொம்பப் பிடிக்குமென்கிறான். தன் வீட்டிலும் ரொட்டியைவிடச் சாதம்தான் அதிகம் சாப்பிடுவார்களென்கிறான். திருவள்ளுவரிலிருந்து ராஜாஜி வரையில் பல தென்னிந்திய அறிஞர்கள் தன்னைக் கவர்ந்திருப்பதாகச் சொல்கிறான். பிறகு இந்தி ஆசிரியர்கள் , அறிஞர்கள் சிலரின் கருத்துக்களை எனக்குக் கூறி , என்னிடம் பதில் மரியாதையை எதிர்பார்க்கிறான். ஏதோ பள்ளிக்கூடத்தில் இருப்பது போலவோ , தேசிய
|
ஒருமைப்பாட்டுக்கான பரிசு பெற முயன்று கொண்டிருக்கும் ஒரு படத்தில் நடிப்பது போலவோ ஒரு சங்கடமான உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நான் பார்த்திருந்த சில பழைய இந்திப் படங்களை ஒரு நாள் தெரியாத்தனமாக அவனிடம் புகழ்ந்து பேசிவிட்டேன். அதிலிருந்து இந்திப் படங்களைப் பற்றிய தன் அறிவையெல்லாம் வலுக்கட்டாயமாக என் மேல் திணிக்கத் தொடங்கியிருக்கிறான். அவனுடைய தேடல் என்ன , அவன் என்ன யாசிக்கிறான் என்பதொன்றும் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை அடிப்படையாக அவன் ஒரு ஹிந்தி ஃபனாடிக்காக இருக்கலாம். அதைத் தனக்குத்தானே தவறென்று நிரூபித்துக்
|
கொள்வதற்காக ஓர் ஆவேசத்துடன் என்னுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறான் போலும்.... அதே சமயத்தில் தன் 213 மனத்தின் கொச்சையான தஞ்சங்களை முழுவதும் திரஸ்கரிக்கவும் அவனால் முடியவில்லை போலும்... எப்படியிருந்தாலும் , இதுவே அவனுடைய முயற்சியாயிருக்கும் பட்சத்தில் , அவனுடன் நான் ஒத்துழைப்பதுதான் பொறுப்பான செயலாகும். இல்லையா ? ஆனால் இந்தப் பளுவை என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு ஒரு கட்டத்துக்குப் பிறகு ,டு ஹெல் வித் அகர்வால் , டு ஹெல் வித் எவ்ரிதிங்க்என்று தோன்றுகிறது. ' ராமு ஒரு கணம் பேசாமலிருந்தான். பிறகுஉனக்கு உன்னைப்
|
பத்தி என்னென்னவோ இல்யூஷன் , தட்ஸ் தி டிரபிள்என்றான்.யூ ஆல்வேஸ் வான்ட் டு பிளே ஸம் கிரேட் ரோல்... ஒரு கம்யூனிடியின் அம்பாசிடராக.. ஓ காட் ! நீ நீயாகவே ஏன் இருக்க மாட்டேங்கிறே ? ' நான் நானாகவேதாம்பா இருக்கப் பார்க்கிறேன்.... விடமாட்டேனென்கிறான்னுதான் சொல்ல வரேன்.. விடலைன்னா விட்டுடு... வானிலையும் விலைவாசியையும் மட்டும் பேசு. ' அதுக்கு நீ சுலபமா சொல்லிடறே... ஹவ் இஸ் இட் பாஸிபிள் ? என்கூடப் பேசாதேன்னு சொல்ல முடியுமா ? ' இவன் அதுவும்... இல்லை , உனக்கு இந்தப் பிரச்னை புரியவில்லை. சில சமயங்களில் நான் அவனிடம் பேசாமலே
|
இருப்பதுண்டு. அப்போது அவன் மூஞ்சி பரிதாபமாக இருக்கும். எனக்கு அவன் மேல் ஏதோ கோபமென்றோ , அவன் என் மனத்தைப் புண்படுத்தி விட்டானென்றோ அவன் உணர்வது போலத் தோன்றும். எனக்கு அவன் மீது அனுதாபம் ஏற்படத் தொடங்கிவிடும். நான் பேசத் தொடங்கி விடுவேன்.... 214 ராமு ஏதோ சொல்லத் தொடங்கினான். கைலாசம் அவனைக் கையமர்த்தி விட்டுத் தொடர்ந்து பேசினார் :ஆனா , பேசாமல் இருக்கிறது ஸ்ட்ரெயினாக இருப்பது போலவே பேசுவது ஸ்ட்ரெயினாகத்தான் இருக்கிறது. அழும் குழந்தையை சிரிக்க வைப்பதற்காக அதற்கு உற்சாகமூட்டும் சேட்டைகள் காட்டுவது போல , அவனுடன்
|
பேசும்போது என்னையுமறியாமல் நான் ஏதேதோ வேஷமணிய நேருகிறது. எழுத்தை ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளனாக , என் இனத்தைப் பற்றிய பிறருடைய சிரிப்பில் கலந்து கொள்ளும் மனவிடுதலை பெற்ற மதராஸியாக , பிற மாநிலத்தவருடைய இயல்புகள் , பழக்கங்கள் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவனாக , என் மொழியின் தொன்மையையும் வளத்தையும் பற்றிய அவனுடைய புகழுரைகளை ஏற்றுக்கொண்டு , அதே சமயத்தில் மொழி வெறியர்களைக் கண்டிப்பவனாக.. இப்படிப் பல மேலோட்டமான வேஷங்கள் , இவற்றின் எதிரொலியாக அவன் அணியும் இணையான வேஷங்கள். அவன் எப்போதும் என் ஆழங்களைத்
|
தொடுவதில்லை. அவனுக்கோ எனக்குத் தெரிந்த வரையில் , ஆழங்களே இல்லை. இந்த நிலைமையை , வேஷங்களின் மூலமே ஒருவரையொருவர் தொட முடிவதை , அவனும் உணராமலில்லை. எவ்வளவுக்கெவ்வளவு ஒரு நாள் நெருங்கிப் பேச முயல்கிறோமோ , அவ்வளவுக்கவ்வளவு அதற்கடுத்த நாள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவே சங்கடப்படுகிறோம். அவன் தன் பிராந்தியத்தின் ஒரு மனவளர்ச்சி பெறாத டைப்பாகவே இருப்பதால் , அதன் எதிரொலியாக உன்னை எப்போதும் ஒரு மதராஸியாக அவன் உணரச் செய்வதுதான் பிரச்னையென்று எனக்குத் தோன்றுகிறது. இதை உன்னால் எப்படித் தவிர்க்க முடியும் ? இந்த
|
மாதிரியானவர்களை எல்லாம் ரொம்ப நெருங்க விடாமல் முதலிலிருந்தே ஒரு டிஸ்டன்ஸ்லே வச்சிருக்கணும். நீ மற்றவர்களை ஏன் இவ்வளவு சுலபமாக உன்னிடம் உரிமைகள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கணும்னு எனக்குப் புரியலை. ' என்ன பண்றது , என்னுடைய இயல்பே அப்படி. ஐ டோன்ட் வான்ட் டு பி அனப்ரோச்சபிள். பிறரை ஆசுவாசம் கொள்ளச் செய்வதற்காக , எனக்கு அவர்கள் மேல் விரோதமில்லை. நான் கர்வமுள்ளவன் இல்லை என்றெல்லாம் உணர்த்துவதற்காக , மெனக்கெட்டு அவர்களுக்கு இணக்கமான ஒரு வேஷத்தை அணிவது என் வழக்கம். கடைசியில் இதுவே ஆபத்தில் கொண்டு விடுகிறது. அவர்கள்
|
இந்த வேஷத்தில் என்னை ஸ்திரப்படுத்த முயலுவது நான் இதை எதிர்த்துத் திணறுவதாக பெரிய தலை வேதனையாகி விடுகிறது. இப்போது ஞாபகம் வருகிறது , அகர்வால் முதல் முதலில் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது நான் மிகவும் சந்தோஷமான நிலையிலிருந்தேன். ஏனென்று தெரியாமலேயே இடுப்பை வளைத்து முகலாய பாணியில் சலாம் செய்து , உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று இந்தியில் கூறினேன். சுத்த அனாவசியம் , நான் இயல்பாகவே இருந்திருக்கலாம். இப்போது அந்த உற்சாகத்தையும் நடிப்பையும் எப்போதுமே அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அதெப்படிச்
|
சாத்தியமாகும் ? நான் உற்சாகமாக உணர்வது அவன் போன்றவர்களுடனல்ல. சே ! நான் ஒரு முட்டாள். ' 215வடிகட்டின முட்டாள் என்று கடிகாரத்தைப் பார்த்த ராமு , மை காட் ! மணி ரண்டாகிவிட்டதே !என்று கூவினான்.உன் ராமாயணத்தைக் கேட்டு நேரம் போனதே தெரியவில்லை. உத்தியோகபவன்லே ஒரு ஆளைப் பார்க்கணும் எனக்குஎன்று சாலையில் வந்த ஓர் ஆட்டோவைக் கை காட்டி நிறுத்தினான். சரி , அப்புறம் எப்ப வீட்டுக்கு வரே ? சொல்லு ! ' நாளைக்கு ராத்திரி சாப்பிட வந்திடு ஒரு கண்டிஷன். * என்ன ? ' நாளைக்கும் அகர்வாலைப் பற்றியே பேசி போர் அடிக்கக் கூடாது. " மாட்டேன்
|
, ஐ பிராமிஸ். ' ராமு ஆட்டோவில் ஏறிக்கொள்ளப் போனவன் , சட்டென்று நின்றான்.இன்னொன்று " என்றான். என்ன ? ' அகர்வால் உன் வீட்டுக்கு வந்ததுண்டா ? ' அதையேன் கேட்கிறே , அந்தக் களேபரமும் ஆயாச்சு. வீட்டுத்தோசை சாப்பிடணும் , வீட்டுத் தோசை சாப்பிடணும்னு ரொம்ப நாளாய்ச் சொல்லிண்டிருந்தான். ஸோ ஒரு நாள் கூட்டிக்கொண்டு போனேன். வீட்டுக்கு வந்து தோசையைத் தின்னு ஒரேயடியாக என் வைஃபை ஸ்தோத்திரம் பண்ணித் தள்ளிப்பிட்டான். மதராஸிப் பொண்களே அலாதியானவர்கள் , அது இதுன்னு ஒரேயடியாக 216 அசடு வழிஞ்சுண்டு , என் வைஃபை சிரிக்க வைக்கறதுக்கக
|
என்னென்னவோ ஜோக்ஸ் அடிச்சுண்டு... இட் ஆல்மோஸ்ட் லுக்ட் ஆஸ் இஃப் ஹீவாஸ் இன்ஃபாச்சுவேட்டட் வித் ஹெர் ! " ராமு கடகடவென்று சிரித்தான்.யூ டிஸர்வ் இட் ! அப்புறம் , நீ அவன் வீட்டுக்குப் போகலையா ? " “ போகணும்... என்ன செய்றதுன்னு தெரியலை... நாளைக்கு , நாளைக்குன்னு டபாய்ச்சுண்டிருக்கேன். என் வைஃப் , நானும் அவன் வீட்டுக்கு வரப்போவதில்லை. நீங்களும் போக வேண்டாம்னு என்னைக் கடுமையாக எச்சரித்து வைத்திருக்கிறாள் , வேறே. ' பெண்கள் இவ்விஷயங்களில் எப்போதுமே புத்திசாலித்தனம் அதிகமுள்ளவர்கள்என்ற ராமு ,ஓ.கே.என்று ஆட்டோவில்
|
ஏறிக்கொண்டான். கைலாசம் தன் தலைவிதியை நொந்தவாறு மறுபடி ஆபிசுக்குள் நுழைந்தார். தன் அறைக்குச் செல்வதற்கு முன்பாககேர்டேக்கர் அறையினுள் எட்டிப் பார்த்தார்.கம் இன் , கம் இன்என்ற கோஷ் அவரை வரவேற்றாப் , கைலாசம் அவனெதிரில் போய் உட்கார்ந்தார். சொல்லுங்கள். உங்களுக்கு நான் என்ன செய்ய முடியும் ?என்றான் கோஷ். நானும் அகர்வாலும் உட்காரும் அறையில் நடுவே ஒரு பார்ட்டிஷன் போடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தீர்களே , என்ன ஆயிற்று ? ' என்ன இது தாதா. நீங்கள்தானே சொன்னீர்கள் , அதெல்லாம் வேண்டாம் , உங்களைப் பொறுத்தவரையில் இன்னொருவனுடன்
|
அறையைப் பகிர்ந்து கொள்வதில் எந்த விதமான அசௌகரியமும் இல்லை , என்றெல்லாம் ? சொன்னேன் , ஆனால்... ' 217இன்ஃபாக்ட் , அகர்வாலுடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போவது உங்களைப் போன்ற ஒருவருக்குச் சிரமமாயிருக்குமென்று நான்கூட எச்சரித்தேன். ஆனால் நீங்கள் , இல்லையில்லை , நான்யாருடன் வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும் என்கிறீர்கள். “ ஐ ஆம் சாரி. நான் என் வார்த்தைகளை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். ' கோஷ் கடகடவென்று சிரித்தான்.நான் சொன்னபோது நீங்கள் நம்பவில்லையல்லவா ?என்று மறுபடி சிரித்தான்.நான் உங்களைக் குற்றம் சொல்ல
|
மாட்டேன் , தாதா. இந்த யு.பி.வாலாக்கள் இருக்கிறார்களே.... அப்பப்பா !என்று தலையை ஒரு அனுபவபூர்வமான சலிப்புடன் இப்படியும் அப்படியுமாக ஆட்டினான்.யூ நோ , தாதா...என்று அந்தப் பிராந்தியத்தினரைப் பற்றிய தன் அறிவை அவருடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினான். கைலாசம் மெளனமாகக் கேட்டுக்கொண்டு உட்காந்திருந்தார். அவருக்குத் தன் மீதே வெறுப்பும் கோபமும் ஏற்பட்டன. 218 அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமே நெஞ்சைக் குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து
|
கொண்டிருந்தாள். புரிந்து கொள்ளும் வயதில்லை எனக்கு. நான்கு வயது. விடிகாலையில் கண் விழிக்கிறேன். ஏதோ தமுக்கு மாதிரி சத்தம் கேட்கிறது. கதவருகே சென்று பார்க்கிறேன். கல்யாணியைப் பலகையில் உட்கார்த்தி இருக்கிறார்கள். எதிரே எவனோ கொத்து இலையோட நிற்கிறான். ஆ ஊ வென்று சில மாதங்கள் மட்டுமே சிரிப்புக் காட்டிய தம்பிப் பாப்பா நான் இருந்த அறையிலேயே தொட்டிலில் இருக்கிறான். " நீரஜாட்சீ , போய்க் கொண்டு வா " என்கிறார்கள் யாரோ. நான் அம்மாவைப் பார்க்கிறேன். கருநீலப் புடவை நினைவில் இருக்கிறது. தலைமயிரை முடிந்து கொண்டிருக்கிறாள்.
|
என் அறையை ஒட்டிய சின்ன அறையில் அம்மா நுழைகிறாள். தலைப்பை நீக்குகிறாள். கையில் இருந்த சிறு கிண்ணியில் மெல்ல தன் மார்பிலிருந்து பால் எடுக்கிறாள். கண்களில் நீர் கொட்டுகிறது. விடிகாலை இருட்டோடு புதைக்கப்பட்டிருக்கும் தவலைக்கு அடியில் விறகு வைத்து வெந்நீர் காய்ச்ச அம்மா எழுந்திருக்கிறாள் தினமும். ஒருநாள் நான் அவளைப் பார்க்கிறேன். அம்மாவின் தலைமயிர் முடிச்சவிழ்ந்து தொங்குகிறது. குந்தி உட்கார்ந்திருக்கிறாள் அம்மா. கூந்தல் பாதி கன்னத்திலும் பாதி காதின் மேலும் விரிந்து கிடக்கிறது. அடுப்பு பற்றிக் கொண்டதும் குனிந்து
|
பார்த்த அம்மாவின் பாதி முகத்தில் தீயின் செம்மை வீசுகிறது. அன்று அம்மா சிவப்புப் புடவை வேறு உடுத்தியிருக்கிறாள். உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கையில்டக்'கென்று அவள் எழுந்து நிற்கிறாள். கூந்தல் முட்டுவரை தொங்குகிறது. 219 விலகியிருந்த தலைப்பினூடே ஊக்குகள் அவிழ்ந்த ரவிக்கை அடியே பச்சை நரம்போடிய வெளேரென்ற மார்பகங்கள் தெரிகின்றன. எங்கிருந்தோ பறந்து வந்து அங்கே நின்ற அக்கினியின் பெண்ணாய் அவள் தோன்றுகிறாள். அவள் அம்மாவா ? அம்மா தானா ? " காளி காளி மகா காளி பத்ர காளி நமோஸ்துதே " என்ற ஸ்லோகம் ஏன் நினைவிற்கு வருகிறது ?
|
" அம்மா.. " அம்மா தலையைத் திருப்பிப் பார்க்கிறாள். " இங்கே என்ன செய்யறாயடீ ? " பேச முடியவில்லை. உடம்பு வியர்க்கிறது. வீட்டில் ஹோமம் நடக்கிறது. அம்மாவின் உதட்டின் சிவப்பாலோ , குங்குமத்தின் தீட்சண்யத்தாலோ கொழுந்து விட்டெரியும் ஜ்வாலையின் பிம்பம் அவளாகப் படுகிறது. " அக்னியே ஸ்வாஆஆஹா.. " என்று ஸ்வாஹாவை நீட்டி முழக்கி நெருப்பில் நெய்யை ஊற்றுகிறார்கள். அந்த " ஸ்வாஹாஆ.. " வின்போது பார்வை நெருப்பின் மீதும் அம்மாவின் மீதும் போகிறது. எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டுகிறாள் அம்மா. புடவையைத் தூக்கிச் செருகியிருக்கிறாள்.
|
வெளுப்பாய் , வழவழவென்று துடை தெரிகிறது. குனிந்து நிமிரும்போது பச்சை நரம்போடுகிறது. " அம்மா நீ மாத்திரம் ஏம்மா இவ்வளவு வெளுப்பு ? நான் ஏம்மா கருப்பு ? " சிரிப்பு. " போடி உன் அழகு யாருக்கு வரும் ? " 220 நிகழ்ச்சிகளில் ஒரு சம்பந்தமுமில்லை. அம்மா தான் அவற்றின் ராணி. அசுத்தங்களை எரித்துச் சுத்திகரிக்கும் நெருப்பு அவள். ஒரு சிரிப்பில் மனத்தில் கோடானுகோடி அழகுகளைத் தோரணமாட வைப்பவள் அவள். சிருஷ்டி கர்த்தா. அவள் மடியில் தலை வைத்துப் படுக்கும் போது நீண்ட மெல்லிய தண்ணென்ற விரல்களால் தடவி , " உனக்கு டான்ஸ் கத்துத் தரப்
|
போறென். நல்ல வாகான உடம்பு " என்றோ , " என்ன அடர்த்தியடி மயிர் " என்றோ சர்வ சாதாரணமான ஒன்றைத் தான் சொல்வாள். ஆனால் மனத்தில் குல்லென்று எதுவோ மலரும். அம்மாவைப் பற்றிய இத்தகைய உணர்வுகளை அம்மாவே ஊட்டினாளா , நானே நினைத்தேனா தெரியவில்லை. என்னுள் பல அழகுகளுக்கு விதை ஊன்றியபோது தன்னுள் அவள் எதை ஸ்தாபித்துக் கொண்டாளோ தெரியவில்லை. அப்போது பதிமூன்று வயது. பாவாடைகள் குட்டையாகப் போக ஆரம்பித்து விட்டன. அம்மா எல்லாவற்றையும் நீளமாக்குகிறாள். அம்மா மடியில் படுக்கும் மாலை வேளை ஒன்றில் எங்கோ படித்த வரிகள் திடீரென்று நினைவுவர
|
அம்மாவைக் கேட்கிறேன். " அம்மா பருவம்னா என்னம்மா ? " மௌனம். நீண்டநேர மௌனம். திடீரென்று சொல்கிறாள். " நீ இப்படியே இருடீம்மா பாவாடைய அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு... " 221 சித்தி பெண் ராதுவைப் பெண் பார்க்க வருகிறார்களாம். அம்மா போய் விடுகிறாள் அங்கே. அந்த முக்கியமான நாளில் அம்மா இல்லை. கல்யாணி தான் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துத் தலை மயிரை அலசி விடுகிறாள். குளியலறையின் ஜன்னல் வழியாக இருள் கலையாத வானம் தெரிகிறது. " கல்லுஸ்.. ரொம்ப சீக்கிரம் எழுப்பிட்டேடீ , பட்டாசு சத்தமே கேக்கலயே இன்னும் " " உனக்கு எண்ணை
|
தேய்ச்சுட்டு நானும் தேய்ச்சுக்க வேண்டாமா ? வயசு பதிமூணு ஆறது. எண்ணை தேய்ச்சுக்க வராது உனக்கு. குனிடீ " கல்யாணிக்கு பொறுமை கிடையாது. தேங்காய் நாரை உரிப்பது போல் தலையை வலிக்க வலிக்கத் தேய்க்கிறாள் கல்யாணி. கத்தரிப்பூ ஸாடின் துணியில் அம்மா எனக்குப் பாவாடை தைத்திருக்கிறாள் அந்த தீபாவளிக்கு. வழுக்கிக் கொண்டு தையல் மிஷினில் ஓடும்போதே மனம் ஆசைப்பட்டது. அந்த முறை அளவு எடுத்து பாவாடை தைத்தாள் அம்மா. " அளவு எடுக்கணும் வாடீ... ஒசந்து போய்ட்டே நீ " அளவு எடுத்துவிட்டு நிமிர்கிறாள். " ரெண்டு இஞ்ச் பெரிசாய்டுத்து இந்தப்
|
பொண்ணு " கத்தரிப்பூ ஸாடின் பாவாடை மற்ற பாவாடைகள் மாதிரி குட்டையாக இருக்காது. வழுக்கிக் கொண்டு தரையை எட்டும். உலுக்கென்று எழுப்பி நிற்க வைத்துத் தலையத் துவட்டுகிறாள் கல்யாணி. ஷிம்மீஸை மாட்டிக் கொண்டு பூஜை அறைக்கு ஓட்டம். பலகை மேல் அடுக்கியிருந்த புதுத் துணிகளில் அப்பா என்னுடையதைத் தருகிறார். " இந்தாடி கறுப்பி.. " அப்பா அப்படித் தான் கூப்பிடுவார். 222 அப்பா அப்படிச் சொல்லும் போது சில சமயம் கூடத்தில் ஹா வென்று தொங்கும் கண்ணாடி முன் நின்றுகொண்டு பார்ப்பேன். அம்மா , காதில் " எத்தனை அழகு நீ " என்று கிசுகிசுப்பதைப்
|
போல் இருக்கும். சரளா வீட்டில் உள்ள கண்ணாடிப் பெட்டியில் உள்ள மீன் மாதிரி வழுக்கிக் கொண்டு போகிறது பாவாடை. வெல்வெட் சட்டை. பொட்டு இட்டுக் கொண்டு அப்பா முன் போகிறேன். " அட பரவாயில்லையே ! " என்கிறார் அப்பா. பட்டாஸை எடுத்து முன் அறையில் வைத்து விட்டு சண்பக மரத்தில் ஏற ஓடுகிறேன். நித்தியம் காலையில் சண்பக மரத்தில் ஏறிப் பூப்பறிப்பது ஒரு வேலை. பூக்குடலையில் பூ நிரப்பி அம்மாவிடம் தந்தால் , " கொள்ளை பூ " என்று கண்களை விரித்து அம்மா தன் விரல்களை அதில் அளைய விடுவாள். விரல்களே தெரியாது. ஸாடின் பாவாடை வழுக்குகிறது.
|
உச்சாணிக் கொம்பில் ஏற முடியவில்லை. இருட்டு வேறு. இறங்கும் தறுவாயில் படேர் என்று வெடிக்கிறது யார் வீட்டிலோ ஒரு பட்டாஸ். உடம்பு நடுங்க மரத்திலிருந்து ஒரு குதி. வீட்டினுள் ஓட்டம். மூச்சு வாங்குகிறது. ஆசுவாசப்படுத்திக் கொண்டு முன் அறைக்கு ஓடி என் பங்குப் பட்டாஸை வெடிக்கிறேன். அப்புறம் தான் பூக்குடலை நினைவு வருகிறது. விடிந்திருக்கிறது. பாவாடையைத் தூக்கிப் பிடித்தவாறே மரத்தினடியில் கிடந்த பூக்குடலையை எடுக்கக் குனிகிறேன். பூக்கள் சில சிதறியிருக்கின்றன. நன்றாகக் குனிந்து எடுக்கும்போது பாவாடை தரையில் விரிகிறது.
|
புதுப்பாவாடையில் அங்கும் இங்கும் கறைகள். மரம் ஏறியதாலோ ? எல்லாம் " கல்லூஸ்.. " என்று அழைத்தவாறே உள்ளே வந்து " பாவாடை அழுக்காக்கியுட்டேண்டி. அம்மா வைவாளா ? " என்று கேட்டுக் கொண்டு பூக்குடலையுடன் அவள் முன் நிற்கிறேன். கல்யாணி ஒரு நிமிடம் வெறிக்கப் பார்த்துவிட்டு " அப்பா " என்று கூவிக் கொண்டே போகிறாள். 223 கல்யாணியின் பார்வை , பூக்குடலையைக் கூட வாங்காமல் அவள் உள்ளே ஓடியது எல்லாமாக மனத்தில் கம்பளிப் பூச்சி நெளிகிறது. ஸாடின் பாவாடையைப் பார்க்கிறேன். வெல்வெட் சட்டையைத் தடவிப் பார்க்கிறேன். ஒன்றும் ஆகவில்லையே ?
|
பகவானே , எனக்கு ஒன்றும் ஆகவில்லையே ? என்னை நானே கேட்டுக் கொள்ளும் போதே தெரிகிறது ஏதோ ஆகிவிட்டதென்று. எங்கும் பட்டாஸ் ஒலிகள் கேட்டவாறிருக்கின்றன்அ. கையில் பிடித்த பூக்குடலையுடன் வேகமாக மூச்சு விட்டவாறு உடம்பு பதற உதடுகள் துடிக்க நிற்கிறேன். ஹோ வென்று அழுகை வருகிறது. அம்மாவைப் பார்க்க வேண்டும். சின்னாளப்பட்டு உடுத்திய தோளில் தலையை அழுத்திப் பதித்துக் கொள்ள வேண்டும். " பயமா இருக்கே " என்று வெட்கமில்லாமல் சொல்லி அழ வேண்டும். அம்மாதலையைத் தடவித் தருவாள். என்னவோ ஆகிவிட்டதே பயங்கரமாக... முறுக்குப் பிழிய வரும்
|
மொட்டைப் பாட்டியை எங்கிருந்தோ கூட்டிக் கொண்டு வருகிறாள் கல்யாணி. பாட்டி அருகில் வந்தாள். " என்னடீம்மா அழறே ? என்னாய்டுத்து இப்போ ? லோகத்துலே இல்லாதது ஆய்டுத்தா ? " பாட்டி சொன்னது ஒன்றும் புரியவில்லை. என் உணர்வு தான் எதையோ புரிந்து கொண்டு பயத்தில் சில்லிட்டதே ஒழிய அறிவுக்கு ஒன்றும் எட்டவில்லை. மனத்தின் ஆழத்திலிருந்து ஆறாத தாகமாய்க் கிளம்பிய ஒரே ஒரு அழைப்பு... " அம்மா ".. ஐந்து வயதில் ஒருமுறை காணாமல் போய் விட்டதை மீண்டும் நினைக்கிறேன். பெரிய பூங்கா ஒன்றில் நீள் இருள் கவிவது தெரியாமல் நடக்கிறேன். திடீரென்று
|
இருளும் , மரங்களும் , ஓசைகளும் , அமைதியும் மனத்தில் பயத்தை உண்டாக்குகின்றன. அப்பா தான் தேடிப் பிடிக்கிறார். ஆனால் அம்மாவைப் பார்த்ததும் தான் அழுகை பீறிடுகிறது. அம்மா பக்கத்தில் போட்டுக் கொள்கிறாள். தடவித் தருகிறாள். : ஒன்னும் ஆகலியே. எல்லம் சரியாப் போயிடுத்தே " என்று மெல்லப் பேசுகிறாள். சிவந்த உதடுகள் நெருப்புக் கீற்றாய் ஜ்வலிக்க தன் முகத்தை என் முகத்தின் மீது வைக்கிறாள். 224 இப்போதும் எங்கேயோ காணாமல் போய் விட்டதைப் போல அடித்துக் கொள்கிறது. கீழே உட்கார்ந்து முட்டங்காலில் தலை பதித்து அழுகிறேன். எதுவோ முடிந்து
|
விட்டது போல் தோன்றுகிறது. தியேட்டரில்சுபம்காட்டிய பிறகு எழுந்து வெளியே வருவதைப் போல் , எதையோ விட்டுவிட்டு வந்தாற் போல் தோன்றுகிறது. அந்தச் சமயத்தில் உலக சரித்திரத்தில் எனக்கு ஒருத்திக்கு மட்டுமே அந்த துக்கம் சம்பவித்தது போல் படுகிறது. அத்தனை துக்கங்களையும் வெல்வெட் சட்டை அணிந்த மெல்லிய தோள்கள் மேல் சுமையாய்த் தாங்குவது போல் அழுகிறேன். இருவருமாக இருந்த மாலை வேளைகளில் அம்மா இது பற்றி ஏன் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். மனத்தை வியாபித்த உணர்வு பயம் மட்டுமே. புதுச் சூழ்நிலையில் புது மனிதர்களிடையே உண்டாகும்
|
சாதாரண பயம் அல்ல. பாம்பைக் கண்டு அலறும் மிரளலில் அரண்டு போய் வாயடைத்துப் போகும் பதைப்பு. மன மூலைகளிலெல்லாம் பயம் சிலந்தி வலைகளாகத் தொங்குகிறது. வெளுத்த உதடுகள் பிளந்து கிடக்கப் பார்த்த உருவம் மனத்தில் தோன்றுகிறது. மண்டை கல்லில் மோதிவிட்டது. என் முன்னே மென் சிவப்பாய் வழுக்கையாய் நடந்து கொண்டிருந்த தலை திடீரென்று குகை வாயாய்த் திறந்து கரும்சிவப்பாய் ரத்தம் பீறிட்டு வந்தது. நிமிடத்தில் ரத்தம் தலையில் கொட்டியது. ரத்தத்தையே வெறித்துப் பார்த்தேன். சிவப்பு எங்கும் படந்து கண்களிலேயே பாய்ந்து ஓடுவது போல் தோன்றியது.
|
மனம் மீண்டும் மீண்டும் அரற்றியது. " ஐயோ எத்தனை ரத்தம் , எத்தனை ரத்தம் " வாயில் ஓசையே பிறக்கவில்லை. ரத்தப் படுக்கை. கிழவன் வாய் திறந்தது , கண்கள் வெறித்துப் போனது , நெஞ்சில் துருத்திக் கொண்டு நிற்கிறது. ரத்தம் எத்தனை பயங்கரமானது... உதடுகள் வெளூக்க.. கை கால்கள் அசைவற்றுப் போக.. அம்மா தேவை. இருட்டைக் கண்டு பயந்ததும் அணைத்து ஆறுதல் சொல்வது போல் , இந்த பயத்திலிருந்து மீள அம்மா வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. அம்மா ஜில்லென்று கரத்தைத் தோளில் வைத்து , " இதுவும் ஒரு அழகுதான் " என்கக் கூடாதா ? " எழுந்திரேண்டீ
|
ப்ளீஸ்.. எத்தனை நாழிடீ அழுவாய் ? " என்னுடன் கூட உட்கார்ந்து தானும் ஒரு குரல் அழுத கல்யாணி கெஞ்சுகிறாள். " அம்மா.. " 225 " அம்மாதான் அடுத்த வாரம் வராளே. இப்போ தான் இதைப் பற்றி லெட்டர் போட்டேன். ராதுவுக்குப் பெண் பார்க்கிறது எல்லாம் முடிஞ்சப்புறம் வருவா. இப்போ நீ எழுந்திருடீ. சுத்த தலைவேதனை. " கல்யாணிக்கு கோபம் வர ஆரம்பிக்கிறது. " எனக்கு என்னடீ ஆய்டுத்து ? " " உன் தலை மண்டை ஆய்டுத்து , எத்தனை தடவை சொல்லறது ? " இனிமே எல்லாம் நான் மரத்துலே ஏறக் கூடாதா ? " நறுக்என்று குட்டுகிறாள் கல்யாணி. " தடிச்சி ! அரை மணியா
|
எழுந்திரு , பாவாடையை மாத்தறேன்னு கெஞ்சறேன். நீ கேள்வி வேற கேக்கறியா ? அப்பா இவள் ரொம்பப் படுத்தறாப்பா " என்று அப்பாவுக்கு குரல் கொடுக்கிறாள். அப்பா வந்து “ அசட்டுத்தனம் பண்ணக் கூடாது. கல்யாணி சொல்றபடி கேக்கனும் " என்கிறார். முறுக்குப் பாட்டி வேறு , " என்ன அடம்பிடிக்கிறாள் ? எல்லாருக்கும் வர தலைவிதி தானே " என்கிறாள் , அப்பா போன பிறகு. ஏழுநாட்கள். அம்மா வர இன்னும் ஏழு நாட்கள்.ராதுவைப் பெண் பார்த்த பிறகு. இருட்டில் தடுமாறுவதைப் போல் ஏழு நாட்கள். அடுத்தகத்து மாமி , எதிர்வீட்டு மாமி எல்லோரும் வருகிறார்கள்
|
ஒருநாள். " தாவணி போடலயாடி கல்யாணி ? " " எல்லாம் அம்மா வந்தப்புறம் தான் மாமி. இது அடங்காப் பிடாரி. அம்மா சொன்னால் தான் கேட்கும் " 226 " இனிமே எல்லாம் சரியாப் போய்டுவா. இனிமே அடக்க ஒடுக்கம் வந்துடும் " " ஏன் ? " இனிமேல் என்ன ஆகிவிடும் ? தாவணி ஏன் போட்டுக் கொள்ள வேண்டும் ? அம்மா சொன்னாளே..இப்டியே இருடீம்மா.. பாவாடைய அலைய விட்டுண்டு..நான் ஏன் மாற வேண்டும் ? யாருமே விளக்குவதில்லை. பொம்மை போல் என்னை உட்கார்த்தி வைத்துப் பேசுகிறார்கள். அப்பா வந்தால் தலைப்பைப் போர்த்திக் கொண்டு மெதுவாகப் பேசுகிறார்கள். ஐந்தாம் நாள்
|
" நீயே எண்ணெய் தேய்ச்சிக்கோடி " என்னிடம் சுடச் சுட எண்ணையைக் கிண்ணியில் ஊற்றிக் கொடுக்கிறாள் கல்யாணி. இடுப்பின் கீழ் நீண்ட கூந்தலுடன் அழுதவாறே போராடிவிட்டு ஷிம்மீஸுடன் கூடத்துக் கண்ணாடி முன் நிற்கிறேன். " இனிமே பாத்ரூமிலேயே டிரெஸ் பண்ணிக்கனும் தெரிஞ்சுதா " என்கிறார் அப்பா. அப்பா போன பிறகு கதவைச் சாத்துகிறேன். ஷிம்மீஸைக் கழற்றிப் போடுகிறேன். கறுப்பு உடம்பை கண்ணாடி பிரதிபலிக்கிறது. முகத்தை விடச் சற்றே நிறம் மட்டமான தோள்கள் , கைகள் , மார்பு , இடை , மென்மையான துடைகளின் மேல் கை ஓடுகிறது. நான் அதே பெண் இல்லையா ?
|
அம்மா என்ன சொல்லப் போகிறாள் ? ஸ்கூல் யூனிபார்ம் போட்டுக் கொள்கிறேன். கதவைத் திறந்ததும் கல்யாணி வருகிறாள். " ஸ்கூல்லே ஏன் வரல்லேன்னு கேட்டா என்னடீ சொல்வே ? " கல்யாணியை வெறித்துப் பார்க்கிறேன். கூண்டிலிருந்து விடுபட்ட பட்சி போல் குதூகலத்துடன் ஸ்கூலுக்கு கிளம்ம்பிக் கொண்டிருந்த வேகம் குறைகிறது. 227 " ஒன்னும் சொல்லவேண்டாம். சும்மா இரு " அன்று கேம்ஸ் பீரியடில் விளையாடவில்லை. அகன்ற மரம் ஒன்றின் பின் மறைந்து கொள்கிறேன். முன்பு ஒரு முறை அப்படி விளையாடாமல் இருந்திருக்கிறேன். மறுநாள் காலை மிஸ். லீலா மேனன் வகுப்பில் "
|
நேற்று விளையாடாத முட்டாள்கள் யார் ? " என்றாள். நான் எழுந்திருக்கவில்லை. " நீ ஏன் எழுந்திருக்கவில்லை ? " என்றாள். " நான் முட்டாள் இல்லையே மிஸ் " என்றேன். ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டில் எழுதி விட்டாள் இம்பர்டினண்ட் என்று , அன்று மிஸ்.லீலா மேனன் திட்டு பற்றிக் கூட மனம் பயப்படவில்லை. இப்போது எனக்கு ஆகியிருக்கும் ஒன்றைவிட வேறு எதுவும் எப்போதும் என்னை பாதிக்காது என்று படுகிறது. மரத்தடியே உட்கார்ந்து வழக்கம் போல எனிட் ப்ளைடன் படிப்பதில்லை. கீழே வெட்டப்பட்டிருந்த குழியில் உதிர்ந்தவாறிருக்கும் பழுத்த இலைகளிடம் நான்
|
கேட்கிறேன். “ எனக்கு என்ன தான் ஆகித் தொலைந்து விட்டது ? " கூண்டிலிருக்கும் கைதி நீதிபதியின் வாயைப் பார்ப்பது போல் அம்மாவின் சொல் ஒன்றுக்காக மட்டுமே மனம் எதிர்பார்க்கிறது. கண்களைத் தாழ்த்தி என்னைப் பார்த்தவாறே , “ உனக்கு ஆகியிருக்கும் இதுவும் அழகு தான் " என்பாளா அம்மா ? பயமுறுத்திய முறுக்குப் பாட்டி , கல்யாணி எல்லோரையும் புன்னகையின் ஒரு தீப்பொறியில் அவள் ஒதுக்கித் தள்ளி விடுவாள். அம்மா வித்தியாசமானவள். அவள் நிற்கும் இடத்தில் வேண்டாதவை அழிந்து வெறும் அழகு மட்டுமே ஆட்சி செலுத்தும். அவளுக்கு எல்லாமே அழகு தான்.
|
அம்மா ரொம்பத் தேவையாக இருக்கிறாள். ஏதோ ஒன்று விளக்கப்பட வேண்டும். கத்தரிப்பூ ஸாடின் பாவாடையை நினைத்தாலே உடம்பு வியர்த்துப் போய் நடுங்குகிறதே. நாக்கு தடித்துப் போய் மரக்கட்டையாய் வாயில் லொட்டென்று படுத்து விடுகிறதே. திடீரென்று இருட்டு கவிந்து கொள்கிற மாதிரியும் திரும்பிப் பார்ப்பதற்குள்ணங்'கென்ற சத்தமும் , ரத்தப் பெருக்கும் நீண்டு கட்டையாய்ப் போன உடலும் அந்த இருட்டில் தோன்றுவது போல இருக்கிறதே , அதை மென்மையான வார்த்தைகளால் யாராவது விளக்க வேண்டும். 228 நான் யாருமே இல்லாமல் இருப்பது போல் உணர்கிறேன். தோட்டக்காரன்
|
எழுப்பியபின் மெல்ல வீட்டுக்குப் போகிறேன். " ஏண்டீ இவ்ளோ லேட் ? எங்கே போனே ? " " எங்கேயும் போகல.. மரத்தடியிலே உட்கார்ந்திருந்தேன் " " தனியாவா ? " " உம் " " ஏண்டீ நீ என்ன இன்னும் சின்னப் பொண்ணா ? ஏதாவது ஆகிவைத்தால் ? " ஸ்கூல் பையை விட்டெறிகிறேன். முகம் எல்லாம் சூடேறுகிறது. செவிகளைக் கையால் மூடிக் கொண்டு வீறிட்டுக் கத்துகிறேன். " நான் அப்படித்தஅன் உட்காருவேன். எனக்கு ஒன்னும் ஆகலை " ஒவ்வொரு வார்த்தையையும் நீட்டி , அழுத்தி வெறிக்கத்தலாய்க் கத்துகிறேன். அப்பாவும் கல்யாணியும் அதிர்ந்து போய் நிற்கின்றனர். நான்
|
கோபித்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போய் உட்காருகிறேன். சண்பக மரத்தின் வாசனையோடு அங்கேயே இருக்கலாம். கல்யாணியும் அப்பாவும் இங்கே வரக் கூடாது. நானும் சண்பக மர வாசனையும் மட்டுமே. ஒன்றும் பேசாத , தொடாத அந்த வாசனை வீட்டு மனிதர்களை விட நெருங்கிய ஒன்றாகப் படுகிறது. இவர்கள் பேசாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அம்மா மாதிரி விழிகளை விரித்துச் சிரிப்பு. அம்மா அப்படி பார்த்தால் நெஞ்சினுள் ஏதோ செய்யும். வாய்விட்டு சிரிக்கத் தோன்றும். பாடத் தோன்றும். அம்மா சிருஷ்டிப்பவள். ஆனந்தத்தை , உத்ஸாகத்தை , அழகை எல்லாம்
|
தலையைத் திருப்பி ஒரு புன்னகையால் ஜாலம் செய்து வரவழைப்பவள். 229 கல்யாணி மேலே வருகிறாள். " சாப்பிட வாடீம்மா சின்ன ராணி , அம்மா உன்னைச் செல்லம் கொடுத்து குட்டிச் சுவராக்கிட்டா " அலட்சியமாக உதட்டைப் பிதுக்கியவாறே எழுந்து கொள்கிறேன். மறுநாள் காலை அம்மா வருகிறாள். டாக்ஸியின் கதவைத் திறந்து கரும்பச்சைப் பட்டுபுடவை கசங்கியிருக்க , அம்மா வீட்டிற்குள் வருகிறாள். " என்ன ஆச்சு ? " என்கிறார் அப்பா. " பொண்ணு கறுப்பாம். வேண்டாம்னுட்டான் கடங்காரன் " " உன் தங்கை என்ன சொல்றா " " வருத்தப்படறா பாவம் " " நமக்கும் ஒரு கறுப்புப்
|
பொண்ணு உண்டு " மொட்டென்று அம்மா முன் போய் நிற்கிறேன். கல்யாணி லெட்டரில் எழுதியதை விட விளக்கமாய் நானே சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. மெல்ல அவள் கழுத்துப் பதிவில் உதடுகள் நடுங்க மென்குரலில் எல்லாவற்றையும் அரற்ற வேண்டும் போல் படுகிறது. நெஞ்சில் நெளியும் பயத்தைக் கூற வேண்டும் என்று அடித்துக் கொள்கிறது. ஏதோ மர்மமான ஒன்றை - இரவு படுத்துக் கொண்டதும் தொண்டையை அடைத்துக் கொள்ள வைக்கும் உணர்வை , என் உடம்பே எனக்கு மாறுதலாகப் படும் தவிப்பை அம்மா விளக்கப் 230 போகிறாள் மெல்ல என்று அவள் முகத்தையே பார்க்கிறேன்.
|
வாழைத்தண்டு போல் நீண்ட கரங்களால் அவள் என்னை அணைக்கப் போகிறாள். நான் அழப் போகிறேன் உரக்க. அம்மாவின் கூந்தலில் விரல்களைத் துளைத்துப் பெருத்த கேவல்களுடன் அழப் போகிறேன். அம்மா என்னைப் பார்க்கிறாள். நான் ஒரு கணம் அவள் கண்முன் ராதுவாய் மாறுகிறேனா என்று தெரியவில்லை. " உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம் ? இதுவேற இனிமே ஒரு பாரம் " சுளீரென்று கேள்வி. யாரைக் குற்றம் சாட்டுகிறாள் ? ஒலியில்லாக் கேவல்கள் நெஞ்சை முட்டுகின்றன. அம்மாவின் உதடுகளும் , நாசியும் , நெற்றிக் குங்குமமும் , மூக்குப் பொட்டும் , கண்களும் ரத்த நிற
|
ஜ்வாலையை உமிழ்வது போல் தோன்றுகிறது. அந்த நெருப்பில் அவள் மேல் போர்த்தியிருந்த தேவ ஸ்வரூபம் அவிழ்ந்து விழ நிர்வாணமான வெறும் மனித அம்மாவாய் அவள் படுகிறாள். அந்த ஈரமில்லாச் சொற்கள் பட்டாக் கத்தியாய் எழுந்து முன்பு முளைவிட்டிருந்த அத்தனை அழகுகளையும் குருட்டுத் தனமாக ஹதம் செய்கிறது. தீராத பயங்கள் கரும் சித்திரங்களாய் நெஞ்சில் ஒட்டிக் கொள்கின்றன. அக்னியே ஸ்வாஆஆஹா... அசுத்தங்கள் மட்டும் எரிக்கப்படவில்லை. மொட்டுக்களும் மலர்களும் கூட கருகிப் போயின. 231 காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன் அவன் நினைத்தபடியே
|
ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம் இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது. " ஹோல்டான் ! ஹோல்டான் ! " என்று கத்தியபடி முன்னே பாய்ந்தான். கைப்பெட்டி அவ்வளவு பையாக இல்லாமல் , உபாதைப் படுத்தவில்லை. ஆனால் தோளிலிருந்து தொங்கிய கான்வாஸ் பைதான் பயங்கரமாக அங்குமிங்கும் ஆடி , அவனை நிலை தடுமாற வைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பையில் ஓர் அலுமினியத் தம்ளரை ஓர் ஓரத்தில் இடுக்கியிருந்தான். அது அவன் விலா எலும்பைத் தாக்கியவண்ணம் இருந்தது. பை உருளை வடிவத்தில் உப்பிப்போயிருந்தது. அதனால் ஒரு
|
கையைத் தொங்கவிட முடியாமல் ஓர் இறக்கை பொலத் தூக்கிக்கொண்டே ஓட வேண்டியிருந்தது. ஓர் இறக்கையுடன் ரெயில் பின்னால்ஹோல்டான் , ஹோல்டான்என்று கத்திக்கொண்டு போவது அவனுக்குப் பொருத்தமில்லாதது ஒன்றைச் செய்யும் உணர்வைக் கொடுத்தது. ஒற்றை இறக்கையுடன் பஸ் பின்னால் கத்திக்கொண்டு போவதாவது ஓரளவு சரியாக இருக்கும். பஸ் ! பஸ்ஸால்தான் இந்த அவதி. அவன் வீட்டிலிருந்து ரெயில் நிலையம் போய்ச் சேர ஏன் பஸ்ஸில் ஏறினான் ? மூட்டை இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்து , பெட்டியும் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் பஸ்ஸில் ரெயில் நிலையம் போய்ச்
|
சேரலாம் என்று தோன்றியே இருக்காது. பஸ்ஸில் அவன் ஏறிய நேரத்தில் கூட்டம் அதிகம். ஒவ்வொரு ஸ்டாப்பிலும் பின் வழியாக ஆண்களும் முன்வழியாகப் பெண்களுமாகப் பிரயாணிகள் ஏறியவண்ணமே இருந்தார்கள். யாருமே டிக்கெட் வாங்குவதைப் பற்றிய எண்ணமே இல்லாததுபோலத் தோன்றினார்கள். அவர்கள் டிக்கெட் வாங்காதவரை கண்டக்டர் பஸ்ஸை நகரச் செய்வதாக இல்லை. இதில் நடுவில் சிறிது நேரம் மழைத் தூறல். சாலையில் ஒரே மாடுகள் ; அல்லது மாட்டு வண்டிகள். பெருச்சாளி சந்து கிடைத்த மட்டும் தன் பெருத்த , தினவெடுத்த உடலை மந்த கதியில் வளைத்துப் போவதுபோல , பஸ்
|
முன்னேறிக்கொண்டிருந்தது. பெருச்சாளி வயிற்றுக்குள் ஒற்றை இறக்கையை விரித்து நின்று கொண்டு அவன் ரெயில் நிலையம் அடைவதற்குள் அவன் வயிறு நிரந்தரமாகக் கழுத்தில் தங்கிவிட்டது. ரெயில் நிலையம் எங்கேயோ , ரெயில் நிலையத்தின் பெயரைச் சொல்லி பஸ் நிற்கும் இடம் எங்கேயோ , அந்த இடத்திலிருந்து ஒற்றைச் சிறகுடன் ஒரு பர்லாங்கு ஓடி வந்தான். ஒரு பர்லாங்கா ? ஒரு மைல் கூட இருக்கும். வழியில் பட்டாணி வண்டிக்காரன். வாழைப்பழம் விற்பவன். செருப்புத் ட் ஹைபவன். ஒரு குஷ்ட ரோகி. ஐந்து குழந்தைகளை வரிசையாகத் தூங்க வைத்துப் பிச்சை கேட்கும் ஒரு
|
குடும்பம். 232 ஐந்து குழந்தைகள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் எப்படித் தூங்க முடியும் ? குழந்தைகளைக் கொன்று கிடத்தி விட்டார்களா ? ஐயோ ! இன்று கொன்று கிடத்திவிட்டால் நாளை ? இல்லை குழந்தைகளை எப்படியோ தூங்கப்பண்ணி விட்டார்கள். மயக்க மருந்து கொடுத்திருப்பார்கள். ஆமாம் , அதுதான். குழந்தைகள் நாக்கில் மாசிக்காயை அரைத்துத் தடவிவிட்டிருப்பார்கள். பாவம் , குழந்தைகள். அப்புறம் மயக்கமுறாத குழந்தைகள் நொண்டிகளை சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகிறவன். முட்டாள் , இப்படிச் சைக்கிளை நடைபாதையில் உருட்டிக்கொண்டு வந்தால் ஒற்றைச்
|
சிறகுடன் ரெயிலைப் பிடிக்க ஓடும் ஐந்துக்கள் எங்கே போவது ? அவனைச் சொல்ல உடியாது. அவன் சைக்கிளில் காற்று இறங்கியிருக்கும். விளக்கு இல்லாமல் இருக்கும். விளக்கு இல்லாமற்போனால் போலீஸ்காரன் பிடித்துப் போய் விடுவான். இதோ இப்போது ஒரு போலீஸ்காரன் எதிரே நிற்கிறான். நடை பாதைக்காரர்களை நிறுத்திவிட்டு வரிசையாக நான்கு லாரிகள் கடந்து செல்ல வழி கொடுத்திருக்கிறான். நான்கு லாரிகள். ஒவ்வொன்றும் பூதமாக இருக்கிறது. பூதங்களால் வேகமாகப் போக முடியாது. மிக மிகச் சாவதானமாகத்தான் அவற்றின் அசைவு. பூதங்கள் நினைத்தால் மாயமாக மறைந்துபோக
|
முடியும். அலாவுத்தீனுக்காக ஒரு அரண்மனையை அதில் தூங்கும் அரசகுமாரியுடன் ஒரு கணத்தில் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்த முடியும். ஆனால் ரெயிலுக்குப் போகும் அவனை ஒரு யுகம் அந்த நடைபாதையோரத்தில் நிறுத்திவைத்து விடும். ஆயிற்று , நிலையத்தை அடைந்தாயிற்று. ரெயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிஷம் இருக்கிறது. டிக்கெட்டையாவது முன்னால் வாங்கித் தொலைத்திருக்கக் கூடாதா ? நான்கு டவுன் புக்கிங்க் ஆபீஸ்கள். அங்கே டிக்கெட் கொடுப்பவர்கள் பகலெல்லாம் வேலையில்லாமல் வெற்றிலை பாக்குப் போட்டுத் துப்பிக்கொண்டு இருப்பார்கள். இவன் டிக்கெட்
|
வாங்கப் போயிருந்தால் வெற்றிலை பாக்குப் போட்டு அரைப்பதிலிருந்து ஓர் இடைவெளி கிடைத்ததே என்று இவனுக்கு மிகுந்த நன்றியுடன் டிக்கெட் கொடுத்திருப்பார்கள். யாரோ சொன்னார்கள் , ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் வாங்கிக்கொள்ளேன் என்று. யார் அந்த மடையன் ? பக்கத்து வீட்டுத் தடியன். அந்த முட்டாள் சொன்னானென்று இந்த முட்டாளும் ,எல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்என்று இருந்துவிட்டான். இப்போது ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஏகக் கூட்டம். கியூ வரிசை. எல்லாரும் வரிசையாகவே வந்து டிக்கெட் வாங்கிக்கொண்டு சில்லறை
|
சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துப் போக வேண்டிய நிர்ப்பந்தம். ரெயிலைப் பிடிக்க வேண்டாமென்றால் கியூ வரிசையில் ஒழுங்காக நின்று , டிக்கெட் வாங்கிச் சில்லறை சரிபார்த்துக் கொண்டு போகலாம். ஒன்றுமே செய்ய வேண்டாமென்றால் எல்லாச் சட்ட திட்டங்களையும் ஒழுங்காக அநுசரித்துப்போய் நல்ல பிள்ளையாகப் பட்டினி கிடந்து சாகலாம். அந்த நடைபாதைப் பிச்சைக்காரக் குழந்தைகள்போல. அந்தக் குழந்தைகள் சாகாமல் இருக்க வேண்டும். பிச்சை வாங்கிச் சேகரித்துக் கொண்டிருக்கும் 233 அந்த ஆண் பெண் இருவரும் அந்தக் குழந்தைகளின் அப்பா அம்மாவாக இருக்க
|
வேண்டும். அப்படி இல்லாமலும் இருக்கலாம். பிச்சைக்காரர்களுக்கு அப்பா ஏது ? அம்மா ஏது ? அப்பா அம்மா இல்லாமலும் இந்த உலகத்தில் இருக்க முடியுமா ? அந்தக் குழந்தைகளுக்கு அவர்கள் அப்பா அம்மா இல்லை. எங்கெங்கேயோ கிடந்த ஐந்து குழந்தைகளைச் சேர்த்து மயக்க மருந்து கொடுத்து நடைபாதையில் கிடத்தி அவர்கள் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளுக்கும் தின்ன ஏதாவது கொடுப்பார்களா ? கொடுக்க வேண்டும். அப்படித் தின்னக் கொடுக்காமல் எத்தனைக் குழந்தைகள் அப்படி மயக்கத்திலேயே செத்துப் போய்விடுகின்றனவோ ? அப்பா அம்மா இருந்து
|
இதோ இவன் மயக்கம்போடாமல் பிச்சைக்காகக் காத்திருக்கிறான். பிச்சையில் ஒரு கூட்டந்தான் , இதோ இந்த டிக்கெட் கொடுக்கும் இடத்தில் நின்று கொண்டிருப்பது. ரெயில் கிளம்ப இன்னும் ஓரிரு நிமிஷம் இருக்கும். இவன் டிக்கெட் வாங்குவதற்கும் அந்த நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது. இப்போதுகூட ஓடிப்போய்ப் பிடித்து விடலாம். நல்ல வேளையாக மாடிப்படி ஏறி இறங்க வேண்டியதில்லை. அப்படியும் நூறு அடி தூரம் இருக்கும்போது வண்டி நகர ஆரம்பித்துவிட்டது. ஓடினான். பிளாட்பாரத்தில் உலகத்தில் இல்லாதது இல்லை. எல்லாம் கூடை கூடைகளாக , மூட்டைகளாக ,
|
இருந்தன. தகர டப்பாக்களாக. இவன் மோதிய ஒரு கூடை திடீரென்று கிருச் கிரீச்சென்று கத்திற்று. கோழிகள். கூடை கூடையாக உயிரோடு கோழிகள். கூடைக்குள் நகர முடியாதபடி அடைத்துவைக்கப்பட்ட கோழிகள். அவற்றினால் கத்தத்தான் முடியும். கூவ முடியாது. அதைத்தான் செய்தன , இவன் மோதியவுடன். அப்புறம் இந்தத் தபால்காரர்களின் தள்ளுவண்டி. வண்டியில் மலைமலையாகத் தபால் பைகள். புடைத்துப்போன தபால் பைகள். எவ்வளவோ ஆயிரம் பேர் எவ்வளவோ ஆயிரம் பேருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். நேரில் பார்த்துப் பேச முடியாததை எல்லாம் கடிதமாக எழுதியிருக்கிறார்கள்.
|
இவர்கள் நேரில் பார்த்தால்தான் எவ்வளவு பேச முடியப்போகிறது ? கடிதத்தில் ,இங்கு யாவரும் நலம். தங்கள் நலமறிய ஆவலாயிருக்கிறேன்என்று மறு சிந்தனை இல்லாமல் எழுதிவிடலாம். கடிதத்தில் அது ஒரு சௌகரியம். இப்படி ஓடிக்கொண்டே இருந்தால் ரெயிலைப் பிடித்து விட முடியுமா ? முடியலாம். ரெயிலின் வேகம் குறைவாக இருந்து , தன் வேகம் அதிகமாக இருந்தால். ஆனால் ஒரு சூத்திரத்தின்படி பின்னால் ஓடுகிறவன் முன்னே போவதை எட்டிப்பிடிக்க முடிவதில்லை. இருந்த போதிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இந்த ரெயிலைப் பிடித்துவிட வேண்டும். " ஹோல்டான் ,
|
ஹோல்டான் ! " என்று கத்திக்கொண்டு ஒற்றைச் சிறகை விரித்துக்கொண்டு பையில் திணித்திருக்கும் அலுமினியத் தம்ளர் கணத்துக்கு ஒரு தரம் அவன் விலா எலும்பைத் தாக்க , அவன் ரெயில் பின்னால் ஓடினான். திடீரென்று பிளாட்பாரம் முழுக்கக் காலியாகப் 234 போய்விட்டது. அவன் அந்த ரெயில் இரண்டுந்தான். இப்போது நிச்சயம் ஓடிப்போய்ப் பிடித்துவிடலாம். ஆனால் பெரிய முட்டுக்கட்டையாக ஒரு பெரிய உருவம் எதிரே நிற்கிறது. கடவுள். " தள்ளி நில்லுங்கள் ! தள்ளி நில்லுங்கள் ! நான் அந்த ரெயிலைப் பிடிக்க வேண்டும். " “ அந்த ரெயிலையா ? " " ஆமாம்.அதைப்
|
பிடித்தால்தான் நான் நாளைக் காலை அந்த ஊர்ப் போய்ச் சேருவேன். நாளைக் காலை அந்த ஊர்ப் போய்ச் சேர்ந்தால்தான் நாளை பத்து மணிக்கு அந்த இண்டர்வியூவுக்குப் போக முடியும். தள்ளி நில்லுங்கள் ! தள்ளி நில்லுங்கள் ! " “ வேலை கிடைத்துவிடுமா ? " " வேலை கிடைக்க வேண்டும். வேலை கிடைத்தால்தான் நான் அந்த நடைபாதைக் குழந்தைகள் போல் சாகாமல் இருக்க முடியும். எனக்குப் பிறக்கும் குழந்தைகளை நான் நடைபாதையில் கிடத்தாமல் இருக்க முடியும். தள்ளிப் போங்கள் ! தள்ளிப் போங்கள் ! " “ நீ என்ன ஜாதி ! " “ நான் என்ன ஜாதியாக இருந்தால் என்ன ? நான் ஒரு
|
சடங்கு , கர்மம் செய்வதில்லை. பெரிதாக மீசை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். ஹோட்டலில் சென்று எந்த மிருகத்தின் இறைச்சி கொடுத்தாலும் தின்கிறேன். சாராயம் குடிக்கிறேன். எனக்கு ஜாதி கிடையாது. தள்ளிப் போங்கள் ! தள்ளிப்போங்கள் ! * “ நீ உனக்கு ஜாதி இல்லை என்பதற்காக அவர்கள் உனக்கு ஜாதி இல்லை என்று நினைக்கப் போகிறார்களா ? " " போ , தள்ளி ! பெரிய கடவுள். " 235 மீண்டும் ஒற்றைச் சிறகு , ஹோல்டான். அலுமினியத் தம்ளர். இந்தச் சனியன் அலுமினியத் தம்ளரை வேறு இடத்தில் திணித்திருந்தால் என்ன > இப்போது நேரமில்லை. இந்தத் தம்ளரே எதற்கு ?
|
தண்ணீர் குடிப்பதற்கு அல்ல ; நாளை ஓரிடத்தில் உட்கார்ந்து ஒழுங்காக சவரம் செய்துக்கொள்வதற்குத்தான். எது எப்படிப் போனாலும் இண்டர்வியூவுக்கு முகச் சவரம் செய்துகொண்டு போக வேண்டும் ! இந்தக் கடவுளுக்குத் தெரியுமோ எனக்கு வேலை கிடைக்காதென்று ? இன்னும் இரண்டடி எட்டிப் பிடித்தால் ரெயில். மெதுவாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் ஓர் அவதி ; ரெயலின் கடைசிப் பெட்டியில் ஏறிக் கொள்ள முடியாது. அது கார்டு வண்டியாக இருக்கும் முற்றும் மூடிய பார்சல் பெட்டியாக இருக்கும். ஆதலாம் ரெயிலை எட்டிப் பிடித்தால் மட்டும் போதாது. ஒன்றிரண்டு
|
பெட்டிகளையும் கடந்து செல்ல வேண்டும். மீண்டும் கடவுள். “ அட ராமச்சந்திரா ! மறுபடியுமா ? " “ ஏதோ உன்மேல் பரிதாபம். அதனால்தான். ” " அப்படியானால் வண்டியை நிற்கச் செய்யும். " " நானா உன்னை வண்டி பின்னால் ஓடச் சொன்னேன் ? ஒரு பத்து நிமிஷம் முன்னதாகவே கிளம்பியிருக்கக் கூடாது ? ” “ ஏதோ எல்லாம் ஆயிற்று. இனிமேல் என்ன செய்வது ? ” " அப்போது அநுபவிக்க வேண்டியதுதான். " " இதைச் சொல்ல நீ எதற்கு ? நான்தான் அநுபவித்துக் கொண்டிருக்கிறேனே. தள்ளி போம் / " இரண்டு முறை கடவுள் தரிசனம் ஆயிற்று. நேருக்கு நேராக. எத்தனை பக்தர்கள் ,
|
எவ்வளவு முனிவர்கள் எவ்வளவு ஆண்டுக்காலம் எப்படியெல்லாம் படாதபாடு பட்டிருக்கிறார்கள் ! இல்லாத 236 தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள் ! புதுமைப்பித்தனாவது வீட்டுக்கு அழைத்துப் போய் ஒரு வேளைச் சோறு போட்டார். நானோ தள்ளிப் போகச் சொல்லிவிட்டேன். கடவுள் என்றால் என்ன என்று தெரிந்தால்தானே ? இப்படி ஓடி ஓடியும் ஐந்து நிமிஷப் பத்து நிமிஷக் கால தாமதத்தில் எவ்வளவோ தவறிப்போயிருக்கிறது. தவறிப் போவதற்கென்றே திட்டமிட்டு காரியங்களைத் தாமதமாகச் செய்ய ஆரம்பித்து அப்புறம் இல்லாத ஓட்டம் ஓடி , கடைசியில் என்ன ஓடினாலும் முடியாது என்று
|
ஆகும் போது , “ பார் ! என் துரதிர்ஷ்டம் ! பார் , என் தலையெழுத்து ! " என்று சொல்லச் சௌகரியமாக இருக்காது ? நாளையோடு இருபத்தைந்து முடிகிறது. இனி இந்த மாதிரி இடங்களில் உத்தியோகம் எதிர்பார்க்க முடியாது. வேலை வாய்ப்பு என்பது நாளை என்பதால் அப்படியே ஒன்றுக்குக் காலாகிவிடும். முழு வேலைவாய்ப்பில் படிப்பு முடிந்து இந்த ஆறு வருஷங்களில் விட்டுவிட்டு எண்பத்தொரு நாட்களில் தினக்கூலி வேலை. ஒரு மாதம் நான்கு நாட்கள் ஒரு பண்டாபீஸில் தற்காலிகமாக. அவ்வளவுதான். ஒரு வேளை வேலைக்கென்று உண்மையாகவே தீவிரமாக முயற்சி செய்யவில்லையோ ?
|
முயற்சி. விடாமுயற்சி. தீவிர முயற்சி. முயற்சி திருவினையாக்கும். முயற்சி திருவினை ஆக்கும். பணக்காரன் ஆகலாம். பணம் வந்தால் ரெயில் நிலையத்துக்கு பஸ்ஸில் வர வேண்டாம். ஒரு டாக்ஸியில் குறித்த நேரத்துக்கு வரலாம். ரெயில் பின்னால் சிறகொடிந்த நெருப்புக்கோழிபோல ஓட வேண்டியதில்லை ; அதுவும் " ஹோல்டான். ஹோல்டான் " என்று கத்திக்கொண்டு. இந்த ஹோல்டான் என்ற சொல்லே தரித்திரத்தின் குறியீடு. நகர்ந்து கொண்டே இருக்கும் உலகத்தை ஹோல்டான் சொல்லி நிறுத்திவிட முடியுமா ? உலகம் நகர்ந்துகொண்டா இருக்கிறது ? பயங்கரமான வேகத்தில் அண்ட வெளியில்
|
சீறிப் பாய்ந்துகொண்டிருக்கிறது. அது மட்டும் அல்ல. இன்னும் ஆயிரக்கணக்கான , கோடிக்கணக்கான அண்டங்கள் , உலகங்கள் , தலை தெறிக்கும் வேகத்தில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இத்தனை அண்ட சராசரஙக்ளைச் சிருஷ்டித்துவிட்டு அவற்றைக் கன வேகத்தில் தூக்கி எறிந்துவிட்டு இந்தக் கடவுள் என் முன்னால் நின்று நான் ஓடுவதைத் தடுக்கிறது ! நான் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறேன் ? ஒரு ரெயிலைப் பிடிக்க ; இந்த ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் நகர ஆரம்பித்துவிட்ட ஒரு ரெயிலைப் பிடிக்க. நான் ரெயிலைப் பிடிக்க வேண்டும். அல்லது அது என்னை
|
விட்டுப் போய்விட வேண்டும். இந்த இரண்டுதான் சாத்தியம். இதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது ? அரை நிமிடம். அதிகம் போனால் ஒரு நிமிடம். ஆனால் இதென்ன மணிக்கணக்காகச் சிந்தனைகள் ? எத்தனை சிந்தனைகள் , எவ்வளவு எண்ணங்கள் ! எண்ணங்கள் என்பது வார்த்தைகள். வார்த்தைகள் காலத்துக்கு உட்பட்டவை. இவ்வளவு நேரத்தில் அதிகபட்சம் 237 இவ்வளவு வார்த்தைகளே சாத்தியம் என்ற காலவரைக்கு உட்பட்டவை. ஆனால் மணிக்கணக்கில் எண்ணங்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கிறேன் ! கடவுளைக்கூடக் கொண்டு வந்துவிட்டேன் ! கடவுள் காலத்துக்கு உட்பட்டவரா ? எனக்குத் தெரியாது.
|
எனக்கு காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை , இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது இரண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுதத்து என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரையில் ரெயில் நின்று கொண்டிருக்கிறது. அது கிளம்பிவிடவில்லை நான் அதைப் பிடிப்பதற்கு அதைத் துரத்திக்கொண்டு போக வேண்டியதில்லை. இந்த ஓட்டைப் பெட்டி , உப்பிப்போன பையுடன் திண்டாடித் தடுமாறி ஓட வேண்டியதில்லை. ஆனால் அப்படி
|
இல்லை. காலம் எனக்கு வெளியேதான் இருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகள். ஆறு ஆண்டுகள். எண்பத்தொரு நாட்கள். ஒரு மாதம் நான்கு நாட்கள். பஸ்சில். பெருச்சாளி ஊர்தல். ஐந்து குழந்தைகள் , கூட நிறையக் கோழிகள். கிரீச் கிரீச். கொக்கரக்கோ இல்லை. இம்முறை கடவுள் பிரத்தியட்சம் , கடவுள் என்றால் என்ன ? என் மனப் பிராந்தி. கடவுளைப் பார்த்தவர் யார் ? அவருக்கு என்ன அடையாளம் கூற முடியும் ? அவர் என்னும்போதே கடவுள் ஏதோ ஆண் பால் போல ஆகிவிட்டது. கடவுள் ஆண் பாலா ? ஐந்து குழந்தைகள் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் காலம்
|
நின்றுவிட்டது. நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். ரெயில் பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறேன். என்ன ? எங்கே ரெயில் ? எங்கே ரெயில் ? அவன் டிக்கட் கொடுப்பவர் கொடுத்த பாக்கிச் சில்லறையை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். உப்பியிருந்த தோள் பையால் ஒரு கையை மடக்க முடியாமல் அப்படியே அகற்றி வைத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ரெயிலில் ஏறிக் கொண்டான். பையில் திணித்து வைத்திருந்த அலுமினியத் தம்ளர் விலா எலும்பில் இடிக்கும்போது அவனுக்கு வலிக்கத்தான் செய்தது. 238 டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த
|
மனிதர் - ஜி.நாகராஜன் போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால் , கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான்.ஒரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட கமலாவைப் பற்றி ஒரு செய்தியும் இல்லை. ஓணத்துக்குப் பிறந்த ஊர் போயிருந்த சரசா இன்னும் திரும்பி வரவில்லை. வெளிக் கதவை அடைத்துவிட்டு ரேழியை அடுத்திருந்த அறையில் குழல் விளக்கொளியில் மெத்தைக் கட்டிலின் மீது தனியே உட்கார்ந்திருந்த தேவயானைக்கு அலுப்புத் தட்டிற்று. ஏதோ நினைவு வந்தவளாய் ரேழியிலிருந்து
|
படிக்கட்டுகளின் வழியே ஏறி மாடியறைக்குச் சென்று விளக்கைப் போட்டாள். அங்கு கீழறையைக் காட்டிலும் சற்று அதிகமான வசதிகள் இருந்தன. பலவகை அந்நிய நாட்டுப் படங்கள் சுவரை அலங்கரித்தன. அறையில் மிகப் பெரிய செட்டிநாட்டுக் கட்டில் ஒன்றும். அதன் மீதுடபில்மெத்தை ஒன்றும் சுவரோரமாக இருந்தன.நைட் புக்கிங் ” குக்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த அவ்வறை சென்ற ஒரு மாத காலமாக மனித நடமாட்டம் அற்றுக் கிடந்தது. கமலாவுக்குத்தான்நைட் புக்கிங்ராசி அதிகம். தேவயானை கட்டிலின் மீது இருந்த மெத்தையை இலேசாகத் திருப்பி , அதன்
|
அடியிலிருந்து ஒரு நீளமான அரை இஞ்சு மணிக்கயிற்றை எடுத்தாள். அவள் ஊரிலிருந்து வரும்போது அவளது தாயார் அவளது படுக்கையைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு அது. அறையின் நடுவில் நின்றுகொண்டு , கயிற்றின் உறுதியைச் சோதிப்பது போல அதைப் பலவிடங்களில் இழுத்துவிட்டுக்கொண்டே , மேலே அறையின் நெற்றுக் கண்ணைப் பார்த்தாள். உத்திரத்தில் ஒரு இரும்பு வளையம் தொங்கிக்கொண்டிருந்தது. அது கட்டிலின் விளிம்புக்கு நேர் மேலே சற்று விலகி அமைந்திருந்தது. கட்டிலின் மீது நின்றுகொண்டு , கயிற்றைக் கொண்டு வளையத்தை எட்ட முடியுமா ? நடுவில் இருந்த
|
மெர்க்குரி விளக்கின் மேற்பாதி , ஒரு வளைந்த தகட்டினால் மறைக்கப்பட்டிருந்ததால் , வளையம் தெளிவாகக் கண்களுக்குக்குப் படவில்லை. சற்று அவசரமாகக் கீழே சென்று துணி உலர்த்தப் பயன்படும் நீளமான மூங்கிற் கழியொன்றை எடுத்து வந்தாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு , கழியின் ஒரு நுனியில் கயிற்றைச் செலுத்த முடியுமா என்று பார்த்தாள். கீழே கதவு தட்டும் சத்தம் கேட்டது. கழியையும் கயிற்றையும் கட்டிலில் போட்டுவிட்டு , கீழே ஓடினாள். வெளிக் கதவைத் திறக்குமுன் சற்றுத் தயங்கினாள். கதவை யாரும் தட்டவில்லை என்பதுபோல் பட்டது. அடுத்த
|
பூங்காவனத்து வீட்டின் கதவு திறக்கும் சத்தம் மட்டுமே கேட்டது. கதவிடுக்கின் வழியே யாரும் நின்றுகொண்டிருந்தனரா என்று பார்த்தாள். யாரும் நின்றுகொண்டிருந்ததாகப் படவில்லை. தேவயானை மாடிப்படியறைக்கு வந்தாள். 239 மீண்டும் கழியைக் கொண்டு கயிற்றை வளையத்தின் உள்ளே செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். தோள்பட்டைகளில் நோவு எடுத்தது. முகத்தில் வியர்வை அரும்பி , நெற்றி வியர்வை ஜவ்வாதுப் பொட்டைக் கரைத்து வழிந்தது. தேவயானைக்கு ஒரு யோசனை வந்தது. அவசர அவசரமாகக் கழியையும் கயிற்றையும் தரையில் போட்டுவிட்டுக் கீழே ஒடிவந்தாள்.
|
புழக்கடையில் ஒரு சன்னலருகே கிடந்த அரையடி நீளமான துருப்பிடித்த ஆணியொன்றைக் கண்டுபிடித்தாள். அதை எடுத்துக்கொண்டு மாடியறைக்கு வந்தாள். ஆணியின் நடுவில் கயிற்றின் ஒரு நுனியை இறுகக் கட்டினாள். அவள் இழுத்த இழுப்பில் கயிறு கையை அறுத்துவிட்டது. வலி பொறுக்காமல் கையில் எச்சிலைத் துப்பிவிட்டு , அதன் மீது ஊதிக்கொண்டாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு கழியின் உதவியால் ஆணியை இரும்பு வளையத்துக்குள் செலுத்த முயன்றாள். ஆணி கழி நுனியில் ஸ்திரமாக அமையாமல் பொத்துப் பொத்தென்று கீழே விழுந்தது. ஒரு நிமிஷம் இளைப்பாறிவிட்டு , கை
|
நடுக்கத்தையும் சரிபடுத்திக்கொண்டாள். பிறகு ஆணியை இரும்பு வளையத்துக்குள் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். ஆணியின் ஒரு பாதி வளையத்துக்குள் நுழைந்தாலும் , மறு பாதி நுழைவதைக் கயிற்றின் முடிச்சு தடை செய்தது. கயிற்றின் கனமும் ஆணி வளையத்துக்குள் செல்வதைத் தடுத்தது. கயிறு நீளமான கயிறு. அவ்வளவு நீளம் கூடாதென்று தேவயானைக்குப் பட்டது. கயிற்றைப் போதுமான அளவுக்கு வெட்டக் கத்தி எங்கு கிடைக்கும் என்று யோசித்தாள். வீட்டில் கத்தி ஒன்றும் கிடையாது. பிளேடு ? அதுவும் இல்லை. தேவயானைக்கு அடுப்பங்கரை அரிவாள்மனை நினைவுக்கு
|
வந்தது. குதித்துத் கீழே சென்று அரிவாள்மணையை எடுத்து வந்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு , தன் கழுத்துக்கும் இரும்பு வளையத்துக்கும் உள்ள இடைவெளியையும் , சுறுக்கு விட வேண்டிய நீளத்தையும் உத்தேசமாகக் கயிற்றைத் துண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். நல்ல வேளையாக அரிவாள்மணை சற்றுப் பதமாகவே இருந்ததால் , கயிற்றை நறுக்குவதில் சிரமம் இல்லை. மற்றொரு யோசனையும் தேவயானைக்கு வந்தது. அரிவாள்மணையைக் கொண்டே கழியின் ஒரு நுனியை சிறிதளவுக்கு இரண்டாக வகுத்துக்கொண்டாள். இப்போது கயிற்று நுனியைக் கழிநுனியில் இருந்த பிளவில்
|
கவ்வவைத்துக் கயிறு கீழே நழுவாதவாறு கழியை உயர்த்த முடிந்தது. இவ்வாறு ஆணியை வளையத்துக்குள் செலுத்தி , ஆணி வளையத்தைக் குறுக்காக அழுத்திக்கொண்டிருக்க , கயிறு நேர்ச்செங்குத்தாகத் தொங்குமாறு செய்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு கயிற்றின் நுனிப்புறம் தலை செல்லுமளவுக்கு ஒரு வளையம் செய்து சுறுக்கு முடிச்சுப் போடப் பார்த்தாள் தேவயானை. சுறுக்கு முடிச்சும் சரியாக விழவில்லை. அவளுக்கு இதிலெல்லாம் அனுபவம் போதாது. இரண்டு மூன்று தோல்விகளுக்குப் பிறகு , ஒருவாறாக முடிச்சு சரியாக விழுந்தது. அப்போது கீழ்க் கதவை யாரோ
|
தட்டும் சத்தம் கேட்டது. தேவயானை சற்றுத் தயங்கினாள். கீழே கதவைத் தட்டும் சத்தம் பலப்பட்டது.இப்போது இதுக்கு என்ன அவசரம் ?என்று நினைத்தவள் போல் , தேவயானை கீழே ஓடிச்சென்று , சேலை முந்தானையால் முகத்தை ஒற்றிவிட்டு ஆடைகளையும் சரி செய்தவாறே வெளிக் கதவைத் திறந்தாள். அத்தானும் வேறொருவரும் வெளியே அறை வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தனர். 240 " கதவெத் தெறக்க இந்நேரமா ? " என்றான் அத்தான். " மேலே இருந்தேன் " என்றாள் தேவயானை. " கதவை அடைச்சிட்டு , லைட்டை அணைச்சிட்டு இருன்னா , ஒன்னே யாரு மேலே போகச் சொன்னது ? " என்றுகொண்டே
|
அத்தான் நுழையவும் , கூட இருந்தவரும் உள்ளே நுழைந்தார். “ உம் , லைட்டைப் போடு " என்றுவிட்டு அத்தான் வெளிக்கதவை அடைத்தான். ரேழி விளக்கைப் போட்டாள் தேவயானை. அத்தான கூட வந்திருந்தவர் நன்றாக வளர்ந்து இருந்தார். அரைகுறை பாகவதர் கிராப்போடு , டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்திருந்தார். வழக்கமாக வருபவர்களைப் போல் அவளையே உற்று நோக்காது ரேழியையும் , ரேழியை ஒட்டியிருந்த அறையையும் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். " சரிதானேங்க ? " என்றான் அத்தான் , அவரைப் பார்த்து. ரேழியை அடுத்திருந்த அறையினுள்
|
நுழைந்து , குழல் விளக்கொளியில் அறையின் சுவர்களை மேலும் கீழும் பார்த்துவிட்டு , " பரவாயில்லை , எல்லாம் சுத்தமாகவே வச்சிருக்கீங்க " என்றார் அவர். " இங்கே எல்லாம் சுத்தமாகத்தான் இருக்கும் " என்றான் அத்தான் கள்ளச் சிரிப்போடு. " அப்ப நா வர்றேன் ,' " பணம் ? " என்றார் வந்தவர். " எல்லாம் டாக்டர்கிட்டே வாங்கிக்கறேன் " என்றுகொண்டே வெளியேறினான் அத்தான். வெளிக் கதவைச் சாத்தித் தள்ளிவிட்டு , ரேழி விளக்கையும் அணைத்துவிட்டு , வந்தவரிடத்து , " வாங்க " என்று கூறிக்கொண்டே ரேழியை அடுத்திருந்த அறையின் குழல் விளக்கின்
|
பிரகாசத்தில் பிரவேசித்தாள் தேவயானை. அவள் நேராகச் சென்று கட்டிலில் அமர்ந்தாள். அவர் தயங்கியவாறு அருகில் வந்து நின்றார். 241 " இப்படி உட்காருங்க " என்றாள் அவள். " இல்லே , அந்த ரேழி ஓரத்துலே ஒரு நாற்காலி இருக்கே , அதை எடுத்திட்டு வா " என்றார் அவர். அவள் சிரித்தாள். " எப்போதுமே சாய்வு நாற்காலியில் சுகமாய் படுத்துத்தான் எனக்குப் பழக்கம் " என்று அவர் விளக்கினார். பலர் அந்தச் சாய்வான பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தேவயானையைக் கொஞ்சியதுண்டு. எனவே உடன் எழுந்து பிரம்பு நாற்காலியை எடுத்து வந்து கட்டிலின் அருகே
|
அதைப் போட்டாள். அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார் ; அவள் மீண்டும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டனர். " நீ அழகா இருக்கே " என்றார் அவர். அவள் சிரித்தாள். " கொஞ்சம் சேலையை வெலெக்கிக்க " என்றார் அவர். அவள் மீண்டும் சிரித்தாள். " உம் , வேடிக்கைக்குச் சொல்லலே ; ஒன் மார்ப முழுசும் மறைக்காதபடி சேலய கொஞ்சம் வெலெக்கிப் போட்டுக்க. " அவள் அவ்வாறே செய்தாள். " கொஞ்சம் நிமிர்ந்து உட்காரு. " அவள் மீண்டும் சிரித்தாள். " கொஞ்சம் நிமிர்ந்து உட்காரேன் " என்று கொஞ்சுவது போல் அவர்
|
சொன்னார். " நீங்க என்ன போட்டாப் படம் பிடிக்கப் போறீங்களா ? " என்று அவள் சிரித்தாள். 242 " ஆமா , அப்படித்தான் வச்சிக்கயேன் " என்றார் அவர். அவளும் அவளது சேலையையும் , முடியையும் ஒரு சைத்ரீகனுக்கு முன் உட்கார்ந்து சரி செய்துகொள்வதுபோல் சரி செய்துகொண்டாள். சற்று நேரம் அவளைப் பார்த்து ரசித்துவிட்டு , ஏதோ குறை கண்டவராய் , “ உட்கார்ந்திருந்தா சரியாப்படலயே ; கொஞ்சம் படுத்துக்க " என்றார் அவர். " நீங்க உட்கார்ந்துதானே இருக்கீங்க , வெறுமனே " என்றாள் அவள் சிரிக்காமல். " நான் இங்கே உக்காந்து இருந்திட்டுப் போகத்தானே
|
வந்திருக்கேன் " என்றார் அவர். அவள் சிரித்துக்கொண்டே படுத்துக்கொண்டாள். ஒரு கையை மடித்து அதைக் கொண்டு தலையைத் தாங்கி அவரை நோக்கிச் சிரித்தவாறே அவள் படுத்துக்கொண்டாள். அவர் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தார். " உங்களுக்கு ஆசை இல்லையா ? " என்றாள் அவள். " நிறைய இருக்கு. " " அப்ப ? " " அதனாலேதான் ஒன்னைப் பார்த்துகிட்டே இருக்கேன். " " பாத்துகிட்டே இருந்தாப் போதுமா ? " அவள் சிரித்தாள். " தொட்டுப் பார்க்கலாம். " " நீங்க தொட்டுப் பாக்கலயே , " 243 " தொட்டா நீ சும்மா இருக்கணுமே ! " என்றார். அவள் சிரித்தாள். " நான்
|
ஒண்ணும் சேட்டை செய்யமாட்டேன் ; நீங்க சும்மா தொட்டுப் பாருங்க. " வெளிக்கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் எழுந்திருக்க முடியாது போல் தவித்தாள். அவர் நிதானமாக எழுந்து கதவைத் திறந்தார். கதவைத் தட்டியது அத்தான்தான். அத்தான் அவரை எதுவும் கேட்குமுன் அவர் பையிலிருந்து எதையோ எடுத்து அத்தானிடம் கொடுக்க வந்தார். " இல்லே வச்சிக்கோங்க , எல்லாம் டாக்டர்கிட்டேருந்து வாங்கிக்கறேன். டாக்டர் கடைக்கு வந்திட்டாரு ; நீங்க வர்லயான்ட்டு கேட்டாரு " என்றான் அத்தான். இப்ப வந்திடறேன்ட்டு சொல்லுங்க " என்றார் அவர். அத்தான்
|
வெளியேறுகிறான் ; அவர் கதவை அடைத்துத் தாளிடுகிறார். " கொடுமை " என்றுகொண்டே அவர் நாற்காலியில் சாய்கிறார். " எது ? " என்றாள் அவள் , கட்டிலிலிருந்து எழுந்து அவர் அருகே நின்றுகொண்டு. " இந்த நேரக் கணக்குதான் " என்று அவர் சொல்லவும் அவள் அவரைக் கட்டியணைக்க முயன்றபடியே , அவரது இரு கன்னங்களிலும் இறுதியாக அவசரமாக அவர் உதடுகளிலும் முத்துகிறாள். “ சரி , நீ போய்ப் படுத்துக்க " என்கிறார் அவர். " நீங்க என்ன செய்யறீங்க ? " என்று கேட்டுக்கொண்டே அவள் மெத்தையில் சாய்கிறாள். 244 " இங்கே இருக்கேன் " என்கிறார் அவர். " அதெக்
|
கேக்கலே ; என்ன தொளில் செய்யறீங்க ? " " பெறந்து , வளந்து , சாவற தொளில்தான் செய்யறேன். " அவள் கட்டிலிலிருந்து எழுந்து அவரை கட்டியணைக்க முயலுகிறாள். அவரோ நாற்காலியில் சாய்ந்தவராகவே கிடக்கிறார். தோல்வியுற்றவளாய் அவள் கட்டில் மெத்தைக்குச் சென்று அதன் மீது விழுகிறாள். " எனக்குத் தண்ணி தவிக்குது " என்கிறாள் தேவயானை. அவர் எழுந்து , ரேழி விளக்கைப் போட்டு , மூலையிலிருந்த பானையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவளுக்குக் கொடுக்கிறார். படுத்தபடியே அவள் தண்ணீரைப் பருகும்போது , அதில் ஒரு பகுதி வாய்க்குள் நுழையாது அவளது
|
மார்பகத்தை நனைக்கிறது. நின்றுகொண்டிருக்கும் அவர் , " சென்று வருகிறேன் " என்கிறார். " அடுத்த வாட்டி எப்ப வருவிங்க " என்றுவிட்டு அவர் பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை அவளிடத்து நீட்டுகிறார். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு , தலையணைக்கு அடியில் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு , தலையணைக்கு அடியில் வைக்கிறாள். அவர் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்கிறார். இரவு மூன்று மணிக்கு அத்தான் வீட்டுக்கு வந்தான். அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று அவளுக்கு ஆவல். ஆனால் வாடிக்கைக்காரர் யாரிடத்தும் அவள்
|
விசேட ஆர்வம் காட்டுவது அத்தானுக்குப் பிடிக்காது. எனவே அவள் எடுத்த எடுப்பிலேயே , " அவர் எனக்கு அஞ்சு ரூவா கொடுத்தார் " என்றாள். " யாரவன் ? " என்றான் அத்தான். 245 " அதான் நீங்க மொதல்லே கூட்டியாந்தீங்களே , அவருதான். " " மொதல்லே யாரக் கூட்டியாந்தேன் ? நான் இன்னிக்கு ஒருவாட்டி தானே வந்தேன் ? " " அதான் , ஏளு ஏளரை மணிக்குக் கூட்டியாந்தீங்களே , அவரே நெனப்பில்லையா ? " “ ஏளு , ஏளரை மணிக்கா ? நான் சுப்பு வீட்லேந்து கிளம்பும்போதே ஒம்பது மணி ஆயிருக்குமே ! " " , ன்னிக்கு சுப்பு வீட்டுக்குப் போயிருந்தீங்களா ? " " ஆமாம் ,
|
இருபது ரூபா வரைக்கும் கெலிப்பு. இன்னைக்கு ஒன்பது மணிவரைக்கும் தெருவுலே தலைகாட்ட வேண்டாம்னுட்டு ஏட்டையா சொல்லியிருந்தாரு. நானும் ஒம்பது வரைக்கும் சுப்பு வீட்டோடவே இருந்திட்டேன். " " அப்ப , அந்த டெர்லின் சட்டைக்காரரே நீங்க கூட்டியாரலையா ? அவர் கூட ஒரு டாக்டர் வந்தாராமே ; நீங்க கூட டாக்குட்டரே வேறே வீட்டுக்குக் கூட்டிப் போனீங்களே ? " " டாக்டரா ? அவர் யாரு டாக்குட்டரு ? ஒனக்கு என்ன புத்தி தடுமாறிடுச்சா , இல்லே கதவெத் தெறந்து போட்டுக்கிட்டு கனவு கண்டிட்டிருந்தயா ? " " , ல்லயே , கதவ அடச்சிட்டு மேலேதான் இருந்தேன்.
|
நீங்க கதவைத் தட்டினப்பதான் கீளே வந்தேன் ,' அத்தான் முழித்தான். அவள் தொடர்ந்தாள். " கொஞ்சம் நீளமா முடி வச்சிருந்தார். நீலநெற டெர்லின் சட்டையும் எட்டு மொள வேட்டியும் கட்டிருந்தாரு. ஆனா என்னெத் தொட்டுக்கக் கூட இல்லே " என்றுவிட்டு தேவயானை சிரித்தாள். 246 " தேவு , சும்மா உளறாதே. நான் தெருவுக்கு வரும்போதெ மணி ஒம்பதுக்கு மேலே ஆயிரிச்சே. அந்த சாயபுப் பையனே மட்டுந்தானே இன்னைக்கு நா கூட்டியாந்ததே. அதுக்கு முன்னாடி யாரெக் கூட்டியாந்தேன் ? " " நா உளர்றேனா , நீங்க உளர்றீங்களா ? " என்றுகொண்டே , தான் அவரிடமிருந்து வாங்கிய
|
ஐந்து ரூபாயை அத்தானிடம் காட்ட தலையணையைத் திருப்பினாள் தேவயானை. தலையணைக்கு அடியே எதுவும் காணப்படவில்லை. தேவயானைக்கு மெய் சிலிர்த்தது. பதட்டத்தில் தலையணையை முழுமையாகப் புரட்டினாள். எதுவும் காணோம். மெத்தைக்கு அடியிலும் , பிறகு தலையணை உறைக்குள்ளும் தேடினாள். ஒன்றும் காணவில்லை. தலையணை உறையின் இரு முனைகளைப் பிடித்துக்கொண்டு தலையணையைத் தலைகீழாகக் கவிழ்த்தாள். தலையணை தலையில் விழுந்தது. உறையினுள் தேடினாள். தரையில் தேடினாள். ஐந்து ரூபாயைக் காணோம். அத்தான் முழித்தான். " எங்கே போயிருக்கும் ; இங்கேதான் எங்காவது
|
இருக்கணும் " என்றாள் தேவயானை நம்பிக்கையோடு. " எது ? " என்றான் அத்தான். " அந்த டெர்லின் சட்டைக்காரர் கொடுத்த அஞ்சு ரூபாதான். " " நீ என்ன கனவு ஏதாச்சும் கண்டாயா ? " என்றுகொண்டே அத்தான் சிரித்தான். " நீங்கதான் வெறிச்சீலே எல்லாத்தையும் மறந்திடுவீங்க " என்றாள் தேவயானை , இன்னும் காணாமற் போன ஐந்து ரூபாயைத் தேடியவாறே. " ஒருவேளை மேலே மாடியிலே இருக்கும் " என்றுகொண்டே , தேவயானை வேகமாகப் படிகளேறி மாடிறயறைக்குச் சென்றாள். அவள் அணைக்காது விட்டுப்போன மெர்க்குரி விளக்கு ஒளியில் , அவள் பிரயாசைப்பட்டு இரும்பு வளையத்திலிருந்து
|
தொங்கவிட்ட கயிறும் , அதன் கீழ் நுனியை அலங்கரித்த வட்டமும் அவளைத் திகைக்க வைத்தன. 247 மருமகள் வாக்கு கிருஷ்ணன் நம்பி மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் இரண்டு பட்டு நின்றது. சமையல் வேலைக்குச் செல்பவர்களும் கோவில் கைங்கரியக்காரர்களும் நிறைந்த அக்ரகாரத்துப் பிள்ளையார் கோவில் தெரு , கிளியின் கோட்டை என்று சொல்லிக்கொண்டார்கள். அந்தக் கோட்டைக்குள் பல குடும்பங்களுக்கும் பால்
|
வார்த்துக்கொண்டிருந்தவர் வீரபாகுக் கோனார்தான். மீனாட்சி அம்மாளிடம் சொந்தமாகப் பசு இருந்தது. வேளைக்குக் கால்படிப் பாலை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு மிச்சத்தை நியாயமாகத் தண்ணீர் சேர்த்து விலைக்கு விற்றுவிடுவாள். ரொக்கந்தான். கடனுக்குத்தான் இந்தக் கடங்கார வீரபாகுக் கோனார் இருக்கிறானே ! மீனாட்சி அம்மாள் அப்படியொன்றும் வறுமைப்பட்டவள் அல்ல. இருந்த வீட்டுக்கும் , ஊரடியில் அறுபத்தாறு சென்ட் நஞ்சைக்கும் அவள் சொந்தக்காரி. தாலுக்கா பியூனாக இருந்து சில வருஷங்களுக்கு முன் இறந்து போன அவள் கணவன் அவள் பெயருக்குக் கிரயம்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.